Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM
மாலத்தீவில் பிடிபட்ட விசைப்படகையும், 8 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தருவைக்குளம் மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 26-ம் தேதி மாலை முதல்அமலுக்கு வந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் மனுக்களை போடுவதற்காக பெரிய பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள், தூய மிக்கேல் விசைப்படகு மற்றும் பருவலை தொழில் புரிவோர்முன்னேற்ற சங்கத் தலைவர் ஏ.அந்தோணி பன்னீர்தாஸ், செயலாளர் என்.புகழ் செல்வமணி, பொருளாளர் ஒய். அந்தோணி ஜெயபாலன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அழைத்து பேசினார். ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனு:
எங்கள் சங்கத்தைச் சேர்ந்த அந்தோணி மிக்கேல் கெமில்டன் என்பவருக்கு, சொந்தமான விசைப்படகு, 12.02.2021 அன்று 8 மீன் பிடித்தொழிலாளர்களுடன் தருவைக்குளத்தில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்றது. கன்னியாகுமரியில் இருந்து தென்திசையில் மீன்பிடித்தொழில் செய்து கொண்டிருந்தபோது, அதிவேக நீரோட்டத்தின் காரணமாக எதிர்பாராத விதமாக மாலத்தீவின் எல்லை அருகேசென்று விட்டனர். அப்போது அங்குரோந்து படகில் வந்த மாலத்தீவுஅதிகாரிகள் விசைப்படகையும், 8 மீனவர்களையும் மாலத்தீவுக்குபிடித்துக் கொண்டு சென்றுவிட்டனர். எனவே, 8 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்குவாரி வேண்டாம்
இதேபோல் வைகுண்டம் வட்டம் மூலக்கரை மேலூர், கீழூர், நடுவூர் மக்கள் சுமார் 100 பேர் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனு விவரம்: எங்கள் ஊருக்கு வடக்கு பக்கத்தில் கல்குவாரி அமைக்கபணிகள் நடைபெற்று வருகிறது.இந்த குவாரியில் வெடி வைக்கும்போது கற்கள் எங்கள் வீடுகளில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அதுபோல சக்தி வாய்ந்த வெடி வெடிப்பதன் மூலம் வீடுகளின் சுவர்களில்வெடிப்பு, கீறல் விழுந்து சேதமடையும் நிலை ஏற்படும். மேலும், கல்குவாரி தூசி காற்றில் கலந்து உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். எனவே, கல்குவாரி பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT