Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திரு நகரி ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நவதிருப்பதி தலங்களில் ஒன்றான இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி புறப்பாடு நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்குகோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு கோஷ்டி நடைபெற்றது. தொடர்ந்து 6.45 மணிக்கு திருத்தேரில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினார். 9 மணிக்கு பக்தர்கள் ‘கோவிந்தா கோபாலா' கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். காலை 11.15 மணிக்கு தேர் நிலையம் வந்தடைந்தது. விழாவில் இன்று (மார்ச் 2) இரவு 7 மணிக்கு சுவாமி பொலிந்துநின்ற பிரானை தெப்பத்தில் எழுந்தருளச் செய்து தெப்ப உற்சவமும், நாளை (மார்ச் 3) இரவு 7 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் ஆச்சார்யர்களுடன் தெப்பத்தில் எழுந்தருளுதலும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT