Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

பொதுஇடங்களில் கட்சி விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பேசினார்.

நாமக்கல்

சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு அலுவலகங்களில் பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர் படங்கள், புகைப்படங்கள் உள்ள காலண்டர்கள், நலத்திட்ட ஒட்டு வில்லைகள் வைத்துக் கொள்ளக்கூடாது. அவை இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அரசு வாகனங்களில் அரசு நலத்திட்ட ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு இருப்பின் அவை உடனடியாக அகற்ற வேண்டும். தங்களது துறை சார்ந்த அலுவலகங்கள் ஏதேனும் திறக்கப்பட்டமைக்கான கல்வெட்டு, பதிவுகள், புகைப்படங்கள் ஏதும் தங்களது அலுவலகத்தில் இருப்பின் அவை உடனடியாக உரிய முறையில் மூடி வைக்க வேண்டும்.

அனைத்துப் பகுதிகளிலும் பொது இடங்களில் கட்சிக் கொடிகள், கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள், சுவர் விளம்பரங்கள் இருக்கக் கூடாது.

அவற்றை உடனடியாக அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உடனடியாக உரிய துறையின் அலுவலர்கள் அகற்ற வேண்டும். கிராமப் பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்ய சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம்.

எந்த ஒரு அரசு அலுவலரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது தொகுதிக்கு தனிப்பட்ட முறையில் வருகை தரும் அமைச்சர். சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்திக்கக் கூடாது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தொடங்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர தடையில்லை. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ளவும், முன்னரே முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்குண்டான பணம் வழங்குவதற்கும் தடையில்லை.

ஒப்பந்தப்பணி கோரல், ஏலம் நடத்தப்படுவது ஆகியவற்றுக்கு தேர்தல் காலங்களில் அனுமதியில்லை. பொது செலவின தலைப்பில் அரசு விளம்பரங்கள் வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x