Published : 21 Feb 2021 03:20 AM
Last Updated : 21 Feb 2021 03:20 AM
சேத்துப்பட்டு அருகே பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.3.20 கோடியில் அமைக் கப்பட்ட சாலையில் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டின் எதிரொலியாக மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஓகூர் – அரியாத்தூர் இடையே 9 கி.மீ.,தொலைவுக்கு சாலை சேதமடைந்து கிடந்தது. கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3.20 கோடி மதிப்பில் கடந்தாண்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை, அடுத்த சில மாதங்களில் சேதமடைந்தது. இதற்கு, கிராம மக்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள், "தரம் இல்லாமல் சாலை அமைத்து, மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
இதுகுறித்து ஆரணி நாடாளு மன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத்திடம் முறையிட்டனர். அதன்பேரில், "தமிழகத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள சாலை பணிகள் தரம் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மத்திய அரசின் கவனத்துக்கு எம்பி விஷ்ணுபிரசாத் கொண்டு சென் றார். இதையடுத்து, மத்திய ஆய்வுகுழுவினர், ஓகூர் – அரியாத்தூர் இடையே அமைக்கப்பட்ட சாலையை நேற்று ஆய்வு செய்தனர். சாலையின் அகலம் மற்றும்கனம், தார் மற்றும் ஜல்லியின் கூட்டு கலவை போன்றவற்றை ஆய்வு செய்துள்ளனர். இவர்களது ஆய்வு அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப் படவுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் கூறும்போது, “தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தி.மலை மாவட்டத்தில் ரூ.36 கோடியில் நடைபெற்ற பணிகள், தரம் இல்லாமல் உள்ளன. இந்ததிட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. தற்போது,சாலையின் தரம் குறித்து ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அவர்களது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT