Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM

வைகுண்டம், வெள்ளூர் குளங்கள் தூர்வாரப்படும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தூத்துக்குடி

தேர்தல் பிரச்சாரத்துக்காக தூத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமியை விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜூ, வி.எம்.ராஜலெட்சுமி, ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வரவேற்றனர்.

பின்னர் வைகுண்டத்தில் முதல்வர் பேசும்போது, “வைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பெரியதாழையில் கடல்அரிப்பை தடுக்க ரூ.55 கோடிசெலவில் தூண்டில் வளைவு அமைக்கப்படுகிறது. சாத்தான்குளம் மணி நகரில் ரூ.7 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. கருமேனி ஆற்றின் குறுக்கே ரூ.7‌ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கொங்கராயகுறிச்சி - கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

வைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் ரூ.8.5 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஏரலில் ரூ.20 கோடியில் தாமிரபரணி குறுக்கே புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏரலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வைகுண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தை அமைக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.9 கோடியில் 518 பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 954 வீடுகள் ரூ.16.25 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 61 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வைகுண்டம் தொகுதியில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளன. ஆழ்வார்திருநகரி அருகே ரூ.26 கோடி மதிப்பில் தாமிரபரணி ஆற்றில் புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது.

வைகுண்டம் கஸ்பா குளம் மற்றும் வெள்ளூர் குளம் தூர்வாரப்படும். வைகுண்டம் அரசுமருத்துவமனை விரிவுபடுத்தப்படும். கொங்கராயகுறிச்சியில் உள்ள பழமையான சட்டநாதர் சிவன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார் முதல்வர்.

மகளிர் குழுவுடன் கலந்துரையாடல்

தொடர்ந்து திருச்செந்தூரில் மகளிர் குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடினார். அப்போது, “உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆலந்தலையில் ரூ.52 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படுகிறது. வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1.20 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படவுள்ளது. புன்னக்காயலில் தூண்டில் வளைவு பணி தொடங்கப்படவுள்ளது. சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்துள்ளோம். முருக பக்தர்கள் வசதிக்காக ரூ.36 கோடியில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன” என்றார் முதல்வர்.

முன்னதாக திருச்செந்தூர் வந்த முதல்வருக்கு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு சென்ற முதல்வர், அங்குள்ள சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x