Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM
தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜிடம் அளித்த மனு விவரம்:
கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள விவசாயிகளின் நீண்ட காலபயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வைகுண்டம் வட்டம் சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் கடன் தள்ளுபடியில் மோசடி நடைபெற்றுள்ளது. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடியை மோசடியாக சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் அவர்களுக்கு வேண்டிய சிலருக்கு மட்டும் கிடைக்கும் வகையில் கிராம நிர்வாக அதிகாரி உதவியோடு ஆவணங்கள் தயார்செய்துள்ளனர். இதனால் கடன்தள்ளுபடி கிடைக்கும் எனஎதிர்பார்த்திருந்த உண்மையான விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எனவே, இந்த விஷயத்தில் ஆட்சியர் தலையிட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கடன் கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவகம் அமைக்க கோரிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அளித்த மனுவில், ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கடைநிலைப் பணிகளே வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்க வேண்டும். மேலும், உயிரிழந்தவர்கள் நினைவாக தூத்துக்குடியில் நினைவகம் அமைக்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு, மகேஷ், சுஜித் உள்ளிட்டோர் அளித்த மனுவில், ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீதுகொலை வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.
பாமக மனு
பாமகவை சேர்ந்தவர்கள் அக்கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜி.ராமச்சந்திரன் தலைமையில் அளித்த மனு விவரம்:‘எட்டயபுரத்தை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். எட்டயபுரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். எட்டயபுரம் அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்பட வழி செய்ய வேண்டும். எட்டயபுரத்தில் அரசுகலைக்கல்லூரி அமைக்க வேண்டும்’.
தூத்துக்குடி அருகேயுள்ள பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனு: ‘பெரியநாயகிபுரத்தில் உள்ள சுடலைமாடசுவாமி கோயிலில் தேவேந்திர குல சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடு நடத்திவருகிறோம்.
இந்நிலையில் இந்த இடத்துக்கு தனிநபர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். அந்த இடத்தை நிலஅளவை செய்யஅந்த நபர் கொடுத்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’.
நூதனமாக வந்து மனு
தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கையில்வைத்துக் கொண்டு, காதில் பூ சுற்றியவாறு வந்து அளித்த மனு: ‘தூத்துக்குடி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாகபெய்த மழையால் மானாவாரி பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் நெல் பயிரும் அழுகி சேதமடைந்து விட்டது. கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் கடனை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நிவாரணத் தொகையை விரைவாக வழங்க வேண்டும்’.
பேருந்து வசதி
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அகமதுஇக்பால் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘என்எல்சி நிறுவனப் பணிகளில் தமிழர்களை புறக்கணித்து வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தும் வகையில் நடத்தப்பட்ட நிர்வாகப் பட்டதாரி பயிற்சியாளர் (GET) தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT