Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM
சேலம் வஉசி தினசரி மார்க்கெட்டில் கடைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தற்காலிக வஉசி பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. மேலும், அதன் அருகே உள்ள தற்காலிக மீன் மார்க்கெட், கடை வீதி போன்ற இடங்களில், தற்காலிகமாக செயல்படும் கடைகளுக்கு, சேலம் மாநகராட்சி நிர்வாகம் தினசரி வாடகைக் கட்டணத்தை நிர்ணயித்து, கட்டண வசூல் உரிமத்தை தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்திருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்ததை விட, வஉசி மார்க்கெட்டில் ஒப்பந்ததாரரால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஒப்பந்ததாரரிடம் வழங்கியிருந்த கட்டண வசூல் உரிமத்தை, மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்தது. ஆனால், இதனை எதிர்த்து ஒப்பந்ததாரர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடையாணை பெற்றார். இந்த தடையை எதிர்த்து, பிரபாகரன் என்பவர் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை, வஉசி மார்க்கெட்டில் கடைக்காரர்களிடம் மாநகராட்சி நிர்வாகமே, தினசரி கட்டணத்தை வசூலித்து, அதன் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, வஉசி மார்க்கெட்டில், அறிவிப்பு பலகை வைத்து, மாநகராட்சி நிர்வாகத்தால், கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கபட்டுள்ள விசாரணை அதிகாரி சுரேஷ், சேலம் வஉசி மார்க்கெட்டில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, கடைகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விவரத்தை, அங்குள்ள கடைக்காரர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், ஒப்பந்ததாரரால் வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்த விவரத்தை அவர் கேட்டறிந்தார். அத்துடன், கட்டணத்துக்காக வழங்கப்படும் ரசீதுகளையும் ஆதாரமாக, விசாரணை அதிகாரி சேகரித்தார். அவரிடம், வஉசி மார்க்கெட் கடைக்காரர்கள் சிலர் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். இந்த ஆய்வின்போது, சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் சண்முக வடிவேல் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT