Published : 14 Feb 2021 03:20 AM
Last Updated : 14 Feb 2021 03:20 AM
திருப்பத்தூர் அருகே கி.பி.11-ம் நூற் றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘சித்திர மேழி’ கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பிரபு தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்கள் சரவணன், தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் கள ஆய்வு நடத்திய போது, சோழர் காலத்தைச் சேர்ந்த இடங்கைத்தள சித்திரமேழி கல்வெட்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் முனைவர் பிரபு கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம் அருகே விவசாய நிலத்தில் கள ஆய்வு நடத்திய போது, அங்கு நிலத்தில் புதைந்த நிலையில், ‘சித்திரமேழி’ கல்வெட்டு இருப்பதை கண்டெடுத்தோம்.
இக்கல்வெட்டானது 3 அடி அகலமும், ஆறரை அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இதன் மேற்புறம் திருமகள் உருவம் பொறிக்கப்பட்டு, பக்கவாட்டில் 2 முழு உருவ யானைகள் துதிக்கை யில் கலச நீரை திருமகள் மீது பொழிவது போல் வடிவமைக் கப்பட்டுள்ளது. யானைகள் கார்மேகங்களா கவும், திருமகள் பூமாதேவியாகவும் கருதப்படுகிறது. இவை வளமைக் குறியீடு களாகும். யானைகளுக்கு மேல் 2 பக்கங் களிலும் சாமரங்கள் காட்சிப்படுத்தப்பட் டுள்ளன. கரண்ட மகுடம் அணிந்த பாத பீடத்தின் மீது இடது காலை மடித்து வைத்து, வலது காலை தொங்கவிட்டப்படி திருமகள் காட்சியளிப்பதுபோல் இக்கல் வெட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருமகளின் பாதத்துக்கு கீழே 2 முக்காலிகள் மீது பூரண கும்பக்கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே 2 அழகிய குத்துவிளக்குகளும், அதற்கு கீழே ஒரு யானை அங்குசம், முரசு, குரடு, ‘வளரி’ (பூமராங்) உழு கலப்பை, கொடிகம்பம் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் போர்ப்படை, உழுபடை, தொழில்படை ஆகியவற்றை குறிப்பதாக உள்ளது. அந்த காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாணிபம் செய்யும் குழுவினர் இந்த 3 படைகளையும் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். சிற்ப வேலைபாடுகளுக்கு கீழே 10 வரிகள் கொண்ட எழுத்துப் பொறிப்புகளும் இக்கல் வெட்டில் காணப்படுகிறது.
தனியார் விவசாய நிலத்தில் கண்டெடுக் கப்பட்ட இக்கல் வெட்டானது கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத் துங்கச் சோழனின் 24-வது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டதாக தெரிகிறது. முதலாம் குலோத்துங்க சோழன் கி.பி.1070-ம் ஆண்டு முதல் கி.பி.1120-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அந்த வகையில், இக்கல்வெட்டா னது கி.பி.1094-ம் ஆண்டில் பொறிக்கப் பட்டதாக இருக்கும் என தெரிகிறது.
அக்காலங்களில் தமிழகத்தில் ‘இடங்கை’ மற்றும் ‘வலங்கை’ என 2 பிரிவுகள் இருந்தன. வலங்கைப் பிரிவு என்பது, எண்ணிக்கையின் அடிப்படையில் இடங்கைப் பிரிவினரைவிட உயர்ந்த நிலையில் இருந்தனர். இடங்கைப் பிரிவில் 6 உட்பிரிவுகளும், வலங்கைப் பிரிவில் 60 உட்பிரிவுகளும் இருந்துள்ளன. வலங்கையில் இருந்த பிரிவுகள் வேளாண்மையை அடிப்படையாக கொண்ட பணிகளை செய்து வந்தனர். இடங்கையைச் சேர்ந்தவர்கள் வேளாண் மையையொட்டியுள்ள தொழில்கள், அதாவது உலோகம் தயாரித்தல், நெசவு உள்ளிட்ட கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் ஈடுபட்டு வந்தனர்.
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டு, தமிழக வரலாற்றில் மிக முக்கியமான கல்வெட்டா கும். எனவே, திருப்பத்தூர் மாவட்டவரலாற்று தடயங்களில் குறிப்பிடத்தக்க இந்த கல்வெட்டினை தமிழக தொல்லியல் துறையினர் மீட்டு உரிய முறையில் பாது காத்து எதிர்கால சந்ததியினருக்கு தெரிய படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT