Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM
மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து 10 நாட்களாகியும் சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிக்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் மணிமுத்தாறு அணை தற்போது நிரம்பி காணப்படுகிறது. சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று 3, 4-வதுரீச்சில் தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறந்து விடப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதிக்கு இன்னும் தண்ணீர்வரவில்லை என, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்சாத்தான்குளம் வட்டம் பேய்க்குளம் பகுதி குளங்களுக்கு வந்துநிரம்பியுள்ளன. அடுத்து புளியங்குளம் வரை தண்ணீர் வந்து, அக்குளமும் நிரம்பியுள்ளது.
அதற்கு அடுத்த குளமான இளமால்குளம், செட்டிக்குளம், நார்த்தன்குறிச்சி குளங்களுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.
13-வது மடை வழியாக முறையாக இப்பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை. புளியங்குளம் பகுதியில் சிலர் மடையை திறக்கவிடாமல், வேறு பகுதிக்கு தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீருக்கு காத்திருப்பு
செட்டிக்குளம் பாசன விவசாயிகள் கூறும்போது, “செட்டிக்குளம் சுமார் 300 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த குளத்தைச் சுற்றி திருவரங்கனேரிகுளம், நொச்சிக்குளம், சீட்னபேரிகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உள்ளன.மழையை எதிர்பார்த்து பயிரிட்டுள்ளோம். தற்போது மழை தவறியதால் மணிமுத்தாறு அணை தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அந்த தண்ணீர் பேய்க்குளம் பகுதிக்கு வந்துள்ளது. ஆனால், இப்பகுதிக்கு இன்னும் வந்து சேரவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து, செட்டிக்குளம் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT