Published : 12 Feb 2021 03:18 AM
Last Updated : 12 Feb 2021 03:18 AM

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல்  சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழாநேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தை அமாவாசை திருவிழாஇம்மாதம் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் வரை தினமும் சுவாமிக்கு அலங்கார, தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகளும், காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும்நிகழ்ச்சியும் நடைபெற்றன.

பத்தாம் திருவிழாவான நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மதியம் 1 மணிக்கு உருகு பலகையில் சுவாமியை எழுந்தருளச் செய்து அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சார்த்தி தரிசனமும் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி வழிபட்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார்கருத்தப்பாண்டியன் செய்திருந்தார். 11-ம் திருவிழாவான இன்று (பிப்.12) காலை 5 மணிக்கு வெள்ளை சார்த்தி தரிசனம், 9 மணிக்கு சிவப்பு சார்த்தி தரிசனம், மதியம் 1 மணிக்கு பச்சை சார்த்தி தரிசனம், மாலையில் ஏரல்சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தக்காட்சி ஆகியவை நடைபெறுகின்றன.

12-ம் திருவிழாவான நாளை தாமிரபரணியில் (பிப்.13) காலை நீராடலும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலை சயன மங்கள தரிசனமும் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x