Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM

திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையை சீரமைக்க வேண்டும் விபத்துகள் அதிகரித்துள்ளதாக ஆட்சியரிடம் முறையீடு

திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பனங்காட்டு மக்கள் கழகம் அமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.செல்வன் தலைமையில் பரமன்குறிச்சி பகுதி மக்கள் ஆட்சியர் கி.செந்தில் ராஜை சந்தித்து அளித்த மனு விவரம்: திருச்செந்தூரில் இருந்துபரமன்குறிச்சி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலை மிகவும் மோசமான நிலையில், குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்ட சிந்தாயாத்திரை மாதா பைபர் நாட்டுப் படகு மீனவர் நலச்சங்க தலைவர் கே.ஆல்ரின், ஆலோசகர் பாத்திமாபாபு, அதிமுக 8-வது வட்டத் தலைவர் எம்.இசக்கிமுத்து உள்ளிட்டோர் அளித்த மனுவில், “தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி பகுதியில் சுமார் 100 பைபர் நாட்டுப் படகுகள் உள்ளன. பைபர் படகுகள்கரைக்கு வரும்போது, கீழ்பாகம்தரை தட்டுகிறது. இதனால் படகுகளை கரைக்கு கொண்டுவருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியை தூர்வாரி ஆழப்படுத்தி தர வேண்டும். மீன் இறங்குதளம் அமைத்து தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் மனு

திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் 8 பேர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், “திருச்செந்தூர் பகுதியில் 2 திருநங்கைகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு கட்டித்தர வேண்டும்.

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x