Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM

திருச்செந்தூர் கோயிலில் வசதிகள் மேம்படுத்தப்படும் புதிய செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் உறுதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் புதிய செயல் அலுவலராக பா.விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்றார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராக ராமேசுவரம் கோயில் ஆணையர் சி.கல்யாணி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரனை திருச்செந்தூர் கோயில் செயல் அலுவலராக நியமித்து, தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராக பா.விஷ்ணு சந்திரன் நேற்று காலை பொறுப்பேற்றார். அப்போது அவர் வேஷ்டி,சட்டை என தமிழர் பாரம்பரிய உடைஅணிந்திருந்தார். முன்னதாக திருக்கோயிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அரசு கோப்புகளில் கையொப்பமிட்டு செயல் அலுவலராக பணிகளைத் தொடங்கினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ இதுவரை பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஏற்றுள்ள அறநிலையத்துறை பணி எனக்கு புதியது. சுப்பிரமணிய சுவாமியே இந்தபணியை வழங்கியதாக மகிழ்ச்சியடைகிறேன். கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஆராய்ந்து, தேவைக்கேற்ப மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

2015-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான விஷ்ணு சந்திரன், இதற்கு முன்பு பரமக்குடி மற்றும்நாகர்கோவிலில் சார் ஆட்சியராகவும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் (வருவாய்) பொறுப்பு வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x