Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மறியல்

கிருஷ்ணகிரியில அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 240 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் தொடங்கியது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று தொடங்கியது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சமூக வனப்பாதுகாவலர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத் தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகப்பெருமாள் தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரசு ஊழியர்கள் கைது

ஈரோட்டில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராக்கிமுத்து மாநில பொருளாளர் பேயத் தேவன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஜய் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மறியலில் ஈடுபட்ட 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரியில் மறியல்

தருமபுரியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர் சங்கத்தினர் 158 பேரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். போராட்டத்தின் போது சங்க மாவட்டச் செயலாளர் சேகர், மாநில துணை தலைவர் பழனியம்மாள் உள்ளிட்டோர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. பின்னர், அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியில் 240 பேர் கைது

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று தொடங்கியது. மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நடராஜன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கோபால கிருஷ்ணன், வணிகவரித்துறை பணியாளர்கள் சங்கம் முருகன், கூட்டுறவுத்துறை நிர்வாக ஊழியர்கள் சங்கம் கோவிந்தராஜ், பட்டுவளர்ச்சித் துறை ஊழியர் சங்கம் கல்யாண சுந்தரம், சத்துணவு ஊழியர் சங்கம் தேவராஜ், நகராட்சி, மாநகராட்சி ஊழியர் சங்கம் சிவா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சாலை மறியலில் ஈடுபட்டதாக 110 பெண்கள் உட்பட 240 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓய்வூதியர்கள் தர்ணா

ஈரோடு காளைமாடு சிலை அருகே, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமையில் நேற்று ஓய்வூதியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும், அனைத்து வகை ஊழியர்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மூன்று மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தர்ணாவின்போது ஓய்வூதியர்கள் வலியுறுத்தினர்.

நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கணேசன் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணபவன், பாரி, திருநாவுக்கரசு, மாவட்ட இணைச் செயலாளர்கள் வெங்கடேசா, கெம்பண்ணா, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சந்திரன் தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தண்டபாணி கோரிக்கை விளக்கவுரை யாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x