Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM
அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்க் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சமூக வன பாதுகாவலர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம்என கூலி முறை பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தினர் கடலூர் மஞ்சக்குப்பம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் ரவி, வெங்கடாஜலபதி, கவியரசு, பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 14 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்க மாநிலசெயற்குழு உறுப்பினர் ஏகாம்பரம் தலைமையேற்று கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். 58 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை அருகில் அரசுஊழியர்சங்க மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT