Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM

லாரி மோதி என்எல்சி ஊழியர் உயிரிழப்பு: ரூ.1 கோடி இழப்பீடு

கடலூர்

விருத்தாசலம் வட்டம் தாண்ட வன்குப்பம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கனகசபை (40).இவர் நெய்வேலி என்எல்சியில் கிரேட் 1 டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வந்தார். கடந்த 17 .12 .2016 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர்- கச்சிராயபாளையம் சாலையில் நமச்சிவாயபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி மோதியதில் கனகசபை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்த கனகசபை மனைவி மல்லிகா கடலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவமணி ஆஜரானார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்த நிலையில் நேற்று கடலூர் சார்பு நீதிமன்ற நீதிபதி இதயராணி தீர்ப்பு வழங்கினார். இதில் விபத்தில் இறந்த கனகசபை குடும்பத்தாருக்கு ரூ. 1 கோடியே 5 லட்சத்து 21 ஆயிரத்து 586 மற்றும் அதனுடன் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து இழப்பீடு தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x