Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி

சேலம்

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து, சேலத்தில் தடையை மீறி மத்திய தொழிற்சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

சேலத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர காவல் துணை ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் தடுப்புகள் அமைத்து நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திட்டமிட்டபடி மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் பேரணியாக புறப்பட்டு சேலம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். அப்போது, புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணி ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டிம் அருகே வந்தபோது, போலீஸார் தடுத்தனர். இதையடுத்து, விவசாயிகள் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

அதேபோல, சேலம் முள்ளுவாடி கேட்டில் இருந்து டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக நாட்டாண்மை கழகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், சிவகிரி, சென்னிமலை, அந்தியூர், பவானி ஆகிய 8 இடங்களில் விவசாயிகளின் வாகனப்பேரணி நடந்தது. ஈரோட்டில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரகுராமன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், காளைமாடு சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை வாகனப்பேரணி நடத்தினர். அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம் தனியார் சர்க்கரை ஆலை எதிரே இரு சக்கர வாகனப் பேரணி நடத்த விவசாயிகள் முயன்றனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் நல்லாக் கவுண்டர் தலைமை வகித்தார்.

தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் விவசாயிகள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் துறையினர் மற்றும் விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து பேரணி செல்ல முயன்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி பெருமாள், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்பட 11 பேரை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தருமபுரி

விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று தருமபுரியில் அமைதிப் பேரணி நடந்தது. தருமபுரி நகரில் ராஜகோபால் பூங்கா முன்பு தொடங்கிய பேரணிக்கு சிஐடியு தொழிற் சங்க மாநில செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். பேரணியில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், தொமுச மாவட்டச் செயலாளர் சண்முகராஜ், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ஓசூர்

ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து தொடங்கி ராம் நகர் அண்ணா சிலையில் முடிவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட குழு செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x