Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
திருவாரூர் மாவட்டம் முழுவதும் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் 4 நாட்கள் பிரச்சார பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதிமாறன் நேற்று தொடங்கினார். நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் நன்னிலம், குடவாசல், கொல்லு மாங்குடி, ஆலங்குடியில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆலங்குடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசியது: பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு மருத்துவம் பார்ப்பவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. உலகத்திலேயே தலைசிறந்த மருத்துவர்கள் தமிழக மருத்துவர்கள்தான். வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமக தலைவர் ராமதாஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
பொங்கலுக்காக ரூ.2,500 கொடுக்கப்படவில்லை. ஓட்டுக்காக கொடுத்துள்ளனர். பெட்ரோல், காஸ் உள்ளிட்ட அனைத்துக்கும் நாம் ஜிஎஸ்டி செலுத்துகிறோம். நம் பணத்தை பெற்றுக்கொண்டு, அதில் ரூ.2,500 கொடுக்கின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்காமல் போகும். ஆனால், மத்திய அரசை எதிர்த்தால் பதவி பறிபோய்விடும் என்ற பயம் காரணமாகவே, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல் படுகிறது.
எனவே, அதிமுக அரசால் 10 ஆண்டுகள் ஏமாந்துவிட்டோம் என்பதை மறக்காமல், வரக்கூடிய தேர்தல் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல் என்ற உணர்வுடன் வாக்களிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT