Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
``தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு நிச்சயம் வழங்கப்படும்” என, தமிழக அரசின் வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் கனமழை காரணமாக பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக மானாவாரி பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. மேலும்,தாமிரபரணி கரையோர பகுதிகளில் நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளன. பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 1 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இப்பணிகளை, தமிழக அரசின்வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
`கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய 5 வட்டாரங்களில் முழுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கருங்குளம் வட்டாரத்தில் 50 சதவீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தாமிரபரணி கரையோரப் பகுதிகளில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயக்குநர் தட்சிணாமூர்த்தி பேசும்போது, ``பாதிக்கப்பட்ட ஒரு விவசாயி கூட விடுபடாத வகையில் கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும். விவசாயிகளின் வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். வெள்ளச்சேத இழப்பீட்டு தொகையை விட மூன்று மடங்கு இழப்பீடு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கிடைக்கும். எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்துக்கான மகசூல் கணக்கெடுப்பையும் சரியாக செய்ய வேண்டும். மேலும்,வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் விரைவில் வரவுள்ளனர்” என்றார் அவர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறும்போது, ``தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த பெருமழையால் பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு, மக்காசோளம், சோளம் போன்ற பயிர்கள் அதிகம் சேதமடைந்துள்ளன. முழுமையாக கணக்கெடுக்கப்பட்ட பிறகே முழு விவரம் தெரியவரும். எந்தவொரு விவசாயியும் விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, யாரும் பயப்படத் தேவையில்லை” என்றார்.
தொடர்ந்து, பெருங்குளம் பகுதியில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதையும், எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் மானாவாரி பயிர்கள் சேதமடைந்துள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT