Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத் (சைமா) தலைவர் ஏ.சி. ஈஸ்வரன், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அனுப்பியுள்ள கடிதம்: திருப்பூர் பின்னலாடைத் துறை, தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துவருகிறது.
ஒசைரி நூல் விலை உயர்வு,நூல் தட்டுப்பாடு, ஜாப் ஒர்க் கட்டணம் மற்றும் ஆடை உற்பத்தி பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நூல் விலை அடிக்கடி உயர்வதால், ஆடை விலையை நிர்ணயிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களை பெறமுடியாமலும், நிறுவனங்கள் தவிக்கின்றன.
இந்திய பருத்திக்கழகம் (சி.சி.ஐ.,) ஆடை உற்பத்தி துறையை கவனிக்கத் தவறுகிறது. இதனால் பஞ்சு விலை உயர்ந்து நூல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரிய நிறுவனங்களுக்கு அதிகளவு பருத்தி விநியோகிக்கப்படுகிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு, போதுமான அளவு பருத்தி வழங்குவதில்லை.
குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பஞ்சு விலையை நிலையாக வைத்திருக்க வேண்டும்.
சி.சி.ஐ. போன்ற அமைப்புகளே, தனியார் வியாபாரிகள் போல நடந்துகொள்வது முறையல்ல. கொள்முதல் செய்யும் பருத்தியை சி.சி.ஐ., வெளிமாநிலங்களில் இருப்பு வைக்கிறது. இதனால் தமிழக நூற்பாலைகள் அதிக தொகையை போக்குவரத்துக்காக செலவிட வேண்டியுள்ளது. எனவே, தென் மாநிலங்களில் பருத்தி கிடங்கு அமைத்து, பின்னலாடைத் துறையை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT