Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும் பள்ளிக்கு வருகை தராத மாணவ, மாணவி களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் இணையவழி கல்வி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஒருங்கி ணைந்த கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் லதா கூறியுள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனவே, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்கள் பொதுத் தேர்வு எழுத இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி வருகையை, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் லதா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். மாநில திட்ட இயக்குநர் லதா கூறியதாவது:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டு உள்ளன.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும் பள்ளிக்கு வருகை தராத மாணவ, மாணவி களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் இணையவழி கல்வி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் அனைத்து வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்றி மாணவ, மாணவிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
70 சதவீதம் வருகை
ஓசூர் மற்றும் தேன்கனிக் கோட்டை கல்வி மாவட்டங்களில் முதல் நாளான நேற்று 70 சதவீதம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.ஓசூர் மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சானிடைசர் வழங்கி கைகளை சுத்தப்படுத்திய பின்னர் வகுப்பறைகளுக்கு செல்ல அனுமதித்தனர்.
கரோனா தடுப்பு விதிமுறை களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கவிதா அறிவுரை வழங்கினார்.
தருமபுரியில் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள 347 பள்ளிகளும் திறக்கப்பட்டன. இப்பள்ளிகளில் பயிலும் 80 சதவீதம் வரையிலான மாணவ, மாணவியர் நேற்று பள்ளிகளுக்கு வருகை தந்தனர். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) சுகன்யா தருமபுரி மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவியர் வருகை உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணி (தருமபுரி), சண்முகவேல் (பாலக்கோடு), பொன்முடி (அரூர்) ஆகியோரும் உடனிருந்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT