Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் தொடங்கப்பட்ட ‘மக்களை தேடி காவல் துறை’ என்ற திட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் இணைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பிள்ளையார் கோயில் தெருவில் ‘பொதுமக்களை தேடி காவல் துறை’ என்ற விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நகர காவல் ஆய்வாளர் பேபி தலைமை வகித்தார். திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பிறகு அவர் பேசும்போது, "தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் ‘மக்களை தேடி காவல் துறை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூலம் ‘வாட்ஸ்-அப்’ குழு ஒன்று தொடங்கப் பட்டு, அதில் அந்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 773 ‘வாட்ஸ் அப்’ குழு காவல் துறை சார்பில் உருவாக்கப் பட்டுள்ளது. அதில், இதுவரை 2 லட்சம் பேர் இணைந் துள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கான பிரச்சினைகள், காவல் துறை சார்பில் கோரப்படும் உதவிகள் மற்றும் தகவல்களை அந்த வாட்ஸ்-அப் குழுவில் பதிவு செய்யலாம். அதன் மீது காவல் துறையினர் உரிய நடவடிக் கைகளை எடுப்பார்கள்.
மேலும், ஒவ்வொரு பகுதிகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், திருட்டு மற்றும் வழிப்பறி, மணல் கடத்தல், சாராயம் விற்பனை, காட்டன் சூதாட்டம், வீடு புகுந்து திருட்டு, வாகன திருட்டு, ஈவ் டீசிங் உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்கள் நடைபெறுவது தெரிய வந்தால், பொதுமக்கள் அந்த குழுக்கள் மூலம் தகவல்களையும், புகார்களையும் தெரிவிக்கலாம்.
மேலும், ஒவ்வொரு பகுதிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்த மாவட்ட காவல் துறை சார்பில் விளையாட்டு பயிற்சிகள் அளிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கு தேவையான மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டு போது மான விளையாட்டு உபகரணங்கள், தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளித்தல், தகுதிப் போட்டிகள் காவல் துறை சார்பில் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில், விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது விளையாட்டு பயிற்சிகளை மேம்படுத்திக்கொள்ளலாம்’’என்றார். முடிவில், எஸ்பி தனிப்பிரிவு ஆய்வாளர் பழனி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT