Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM

சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை தருமபுரியில் சுகாதார திட்டங்கள் இணைச் செயலர் ஆய்வு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த, கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாமை தமிழக சுகாதாரத் துறை இணைச் செயலர் டாக்டர் நடராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அடுத்த படம்: ஈரோடு தனியார் மருத்துவமனையில் நடந்த கரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகையை ஆட்சியர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் / தருமபுரி

சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் நோய் தடுப்பூசி ஒத்திகை நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பூசி ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகர் நல மையம், கேர் 24 தனியார் மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. தடுப்பூசி செலுத்தப்படும்போது, பாதகமான நிகழ்வுகள் நடந்தால், அதைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவது இந்த ஒத்திகையின் நோக்கம்.

முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் மற்றும் நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது, என்றார்.

இணையத்தில் பதிவேற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாமக்கல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், குமாரபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் நாமக்கல் மகாராஜா மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்ட தடுப்பூசி வழங்குவதற்காக 72 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் பணிபுரியும் 3,739 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் விவரங்களும், 759 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 3,907 மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்களின் விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.

125 பேருக்கு தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நடந்தது. இதனை ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணகிரி டிசிஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, காவேரிப் பட்டணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பர்கூர் அரசு மருத்துவமனை, ஓசூர் சீதாராம் நகர் நகர்ப்புற நல மையம் ஆகிய 5 இடங்களில் 125 முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. கரோனா தடுப்பூசி அறிவிக்கப்படும் தேதியில் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் பாதுகாப் பான முறையில் வழங்கப்படும்,’’ என்றார்.

விவரங்கள் கணினியில் பதிவு

சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு மருத்துவமனை, மேட்டூர் தலைமை மருத்துவமனை, குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையம், கோகுலம் மருத்துவமனை, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைகள், ஆத்தூர் நகர ஆரம்ப சுகாதார நிலையம், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை என பத்து இடங்களில் கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகை நடந்தது. தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் நபர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து, அவர்களின் விவரங்களை கணினியில் பதிவு செய்து கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

இணை செயலர் ஆய்வு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரிமங்கலம் அரசு மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை, தருமபுரி நகர்ப்புற அரசு மருத்துவமனை மற்றும் 1 தனியார் மருத்துவமனை என 5 இடங்களில் நேற்று, கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சியை, தமிழ்நாடு சுகாதாரத் திட்டங்கள் துறை இணைச் செயலர் டாக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார். காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x