Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM
பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கோழிப் பண்ணைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பொன்.பாரிவேந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் 60 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, பரவலாக பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கோழிப்பண்ணைக்குள் நாரை போன்ற நீர்ப்பறவைகள் நுழைந்துவிடாமல், தடுக்கும் வகையில் பண்ணை வளாகத்துக்குள் நீர் நிலைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள் அனைத்தும் ஒரே வயதுடையதாக இருக்க வேண்டும். உற்பத்தி முடிந்து கழிவு செய்த பின்னரே புதிதாக கோழிக் குஞ்சுகள் வாங்க வேண்டும். பண்ணையில் உள்ள ஒரு கொட்டகையில் இருந்து மற்றொரு கொட்டகைக்கு வேலை ஆட்கள் செல்லக்கூடாது. பண்ணைக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் அதன் சக்கரங்கள் மீதும், விசைத்தெளிப்பான் மூலம் கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும். கையுறைகள், முகமூடி மற்றும் ரப்பர் காலுறைகள் அணிந்து பண்ணை வேலையாட்கள் வேலைசெய்ய வேண்டும் பண்ணைக்குள் நுழையும்போதும், வேலை முடிந்து வெளியே செல்லும்போதும் கை,கால்களை கிருமிநாசினி கொண்டுசுத்தம் செய்த பின்னர் உடைகளையும் மாற்றிச் செல்ல வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை பண்ணைவளாகத்தை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.தீனி தட்டுகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள், பறவைக் கூண்டுகள் முதலிய பண்ணை உபகரணங்களை முற்றிலுமாக கிருமிநாசினிகொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.பிற பண்ணைகளில் இருந்து மேற்கூறிய உபகரணங்களை கடன் வாங்குதல் தவிர்க்கப்பட வேண்டும்.கோழிகள், வாத்துகள், வான் கோழிகள் போன்ற பல்வேறுவகை பறவை இனங்களை, ஒரே பண்ணையில் வைத்து பராமரிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT