Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM

ஆற்றுப்புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு ஆட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் பெண்கள் மனு

விளாத்திகுளத்தில் ஆற்று புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண்கள். (அடுத்த படம்) வேலைவாய்ப்பு கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க 3 பெண் குழந்தைகளுடன் வந்த சங்கரப்பேரியை சேர்ந்த கோமேஸ்வரி. படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் ஆற்றுப்புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக் கோரி, அப்பகுதி பெண்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள்குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் 7-வது வார்டு போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்த பெண்கள் சுமார் 50 பேர் அளித்த மனு விவரம்:

விளாத்திகுளம் 7-வது வார்டில் உள்ள ஆற்றுப்புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக சிறுவர்கள் விளையாடவும், முதியோர், பெண்கள் நடைபயிற்சி செய்யவும் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய கடந்த 6 ஆண்டுகளாக சிலர் முயன்று வருகின்றனர்.

தனிநபர் ஒருவர் அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முயற்சி செய்கிறார். ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி, குறிப்பிட்ட நிலத்தை பொது பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

தூத்துக்குடி சங்கரப்பேரி 3-வது தெருவைச் சேர்ந்த எஸ்.கோமேஸ்வரி (33) என்ற பெண் தனது மூன்று மகள்கள் மற்றும் உறவினர்களுடன் அளித்த மனு:

எனது கணவர் செல்வம் கரோனாவால் 19.10.2020-ல் இறந்துவிட்டார். அவர் கூலி வேலைசெய்துதான் எங்கள் குடும்பத்தைகாப்பாற்றி வந்தார். தற்போது, வேறு வருவாயின்றி, மூன்று பெண்குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

பேருந்து வசதி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், 12-வது வார்டு உறுப்பினர் பி.சுப்புலெட்சுமி அளித்த மனு:கரோனா ஊரடங்கு காரணமாக கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்போது, பேருந்துகளை 100 சதவீத பயணிகளுடன் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பல பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை.

தூத்துக்குடி- கீழசெய்தலை, தூத்துக்குடி- கொல்லம்பரும்பு, தூத்துக்குடி- மிளகுநத்தம், தூத்துக்குடி- வெள்ளாரம், விளாத்திகுளம்- குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கான பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. இந்த பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர் தர்ணா

சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஐ.பாலகிருஷ்ணன் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், அவர் அளித்த மனு: உடன்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி கடந்த 30.05.2019-ல் ஓய்வு பெற்றேன். இதுவரை, எந்தவித ஓய்வூதிய பலன்களும் கிடைக்கவில்லை. எந்தவித குற்றச்சாட்டும் நிலுவையில் இல்லாத போதும், எனக்குபணி விடுவிப்பு மற்றும் ஓய்வூதியபலன்களை வழங்க பள்ளி நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எனது ஓய்வூதிய பலன்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x