Published : 04 Jan 2021 03:20 AM
Last Updated : 04 Jan 2021 03:20 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 கிராமங்களில் அரசின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுக்க கிராமங்களில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர், கடந்த மாதம் 14-ம் தேதி சென்னையில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோருடன் மினி கிளினிக்குகள் செயல்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களை தேர்வு செய்து 50 இடங்களில் இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், தளி ஆகிய 10 ஒன்றியங்களிலும் 50 இடங்களில் இந்த கிளினிக்குகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
அந்தந்த பகுதி மக்கள் தங்கள் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த கிளினிக்குகளில் சிகிச்சை பெற்று பயனடைய முடியும். மாவட்டத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஊத்தங்கரை சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் ஒன்றியத்தில் மாடரஅள்ளி கிராமத்தில் ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.
அம்மா மினி கிளினிக்குகளில் சளி, காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையும், மருந்துகளும் உடனடியாக வழங்கப்படும். கிராமப்புறம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இந்த கிளினிக்குகள் செயல்படும்.
மாலையில், கிராமப் புறங்களில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த கிளினிக்குகள் இயங்கும். இந்த கிளினிக்குகளுக்கு வரு வோருக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் உள்ள மாவட்ட தலைநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT