Published : 02 Jan 2021 03:26 AM
Last Updated : 02 Jan 2021 03:26 AM
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பல ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் சித்தா மருந்தகத்தை, அம்மா மினி கிளினிக்காக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூரைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு செய்துங்கநல்லூரை சார்ந்தே இருக்கின்றனர்.
இங்கு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை வசதி கிடையாது. கடந்த10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுசித்தா மருந்தகம் ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மருந்தகம் மூடிக்கிடக்கிறது.
தமிழக முதல்வர் அறிவித்த அம்மா மினி கிளினிக் ஒன்றுசெய்துங்கநல்லூரில் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயன்பாடு இல்லாமல் மூடிக்கிடக்கும் சித்தா மருந்தகத்தை, அம்மா மினி கிளினிக்காக மாற்றினால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் ஊராட்சித் தலைவர் பார்வதிநாதன் கூறும்போது, ``கருங்குளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, அங்கு சித்தா பிரிவு இருந்தபோதும், செய்துங்கநல்லூரில் இயங்கிய சித்தா மருந்தகத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.
இங்கு பணியாற்றிய மருத்துவர் பணி ஓய்வுபெற்ற பின்பு,மாற்று மருத்துவர் பணி அமர்த்தப்படவில்லை. மருந்தகத்தையே மூடி விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே, செய்துங்கநல்லூர் சித்தா மருந்தகத்தை, அம்மா மினி கிளினிக்காக மாற்றி விரைவில் திறக்க வேண்டும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT