Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM

பெண் காவலர் உயிர்த்தெழுவார் என உடலுடன் காத்திருந்த சகோதரி

திண்டுக்கல் அருகே நந்தவனம்பட்டி டிரசரி காலனியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி அன்னை இந்திரா(38). இவர், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் சில ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து தனியே வசித்தனர்.

இந்நிலையில், அன்னை இந்திராவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அக்.16 முதல் மருத்துவ விடுப்பில் இருந்தார். டிச.25-ல் பணிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் நேற்று வரைப் பணிக்கு வரவில்லை. இதனால், அன்னை இந்திராவின் நிலை குறித்து அறிந்து வர 2 பெண் காவலர்களை அவரது வீட்டுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

வீட்டின் உள்பக்கக் கதவு பூட்டியிருந்த நிலையில், உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்து அங்கு சென்ற பெண் காவலர்கள், அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.தாடிக்கொம்புபோலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.வீட்டினுள் பார்த்தபோது அன்னைஇந்திராவின் உடல் அழுகியநிலையில் துணியால் சுற்றப்பட்டுஇருந்தது. அருகில் அவரது மூத்தசகோதரி வாசுகி, அவரது 2 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் சுதர்சனம் ஆகியோர் இருந்தனர்.

இவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணைநடத்தியதில், உடல்நிலை பாதித்தஅன்னை இந்திரா சில தினங்களுக்கு முன்பு இறந்ததாகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தினமும் பிரார்த்தனை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர். இது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இறந்து சில தினங்கள் ஆன நிலையில் உடல் அழுகியிருந்ததால், அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x