Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், புதூர், விளாத்திகுளம், கருங்குளம், தூத்துக்குடி ஆகிய வட்டாரங்களில் ராபி பருவத்தில் மானாவாரி பயிராக உளுந்து 55,345 ஹெக்டேர் பரப்பிலும், பாசிப்பயறு 18,841 ஹெக்டேர் பரப்பிலும் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்கள் தற்போது பூ மற்றும் காய் பருவத்தில் உள்ள நிலையில் அவற்றில் சாம்பல் நோய் தாக்குதல் தென்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் தலைமையில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி வேளாண் பூச்சியியல் துறைத்தலைவர் சீனிவாசன், உதவி பேராசிரியர் ரவி மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் அடங்கிய குழுவினர் கயத்தாறு வட்டாரம், பன்னீர்குளம், திருமலாபுரம் மற்றும் சொக்கலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் வயலாய்வு மேற்கொண்டனர். இதில் உளுந்து மற்றும் பாசிபயறு பயிர்களில் சாம்பல் நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதுஇரவில் அதிக குளிர், அதிகாலை பனிபொழிவு ஆகியவை சாம்பல் நோய் ஏற்படக் காரணமாக உள்ளது. இந்த நோய் தாக்கப்பட்ட பயிர்களில் இலைகள் மீது வெள்ளை நிற பொடித் திட்டுக்கள் தோன்றும். இலைப்பரப்பு முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து விடும்.
காற்று வழியாகப் பரவும் இந்த நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் உடனடியாக ஏக்கருக்கு கார்பன்டஸிம் 50 டபிள்யூ.பி. 200 கிராம் (அல்லது) மான்கோஸெப் 72 டபிள்யூ.பி. 500 கிராம் (அல்லது) வெட்டபில் சல்பர் 80 டபிள்யூ.பி. 500 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தெளிக்க வேண்டும்.
மஞ்சள் தேமல் நோய் வெள்ளை ஈ என்ற பூச்சி மூலம் பரவுகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட பயிர்களில் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். முடிவில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். நோய் தாக்கப்பட்ட செடிகளில் காய்க்கும் காய்களின் அளவு குறையும்.
இந்த நோய் பாதிப்பில் இருந்து பயிர்களை காத்திட ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். 50 மில்லி, (அல்லது) தையோமீதாக்ஸம் 25 டபிள்யூ.ஜி 50 கிராம் (அல்லது) அஸிட்டாமிபிரிட் 20 எஸ்.பி 20 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தெளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT