Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM
திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை யொட்டி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி, நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை தொடர்ந்து நடந்தது.
இதில், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக அபிஷேக நிகழ்ச்சி அறநிலை யத்துறை சார்பில் யூ-டியூபில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஏராளமான பக்தர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்செய்தனர்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், தலைவாசலை அடுத்த ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயில், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர்கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில் களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஈரோடு
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ் வரர் கோயிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று முன் தினம் காலை பிச்சாண்டார் உற்ஸவம் நடந்தது. மாலை, சிவகாமியம்மன் சமேத தில்லை நடராஜருக்கு திருக்கல்யாணம் நடந்தது.இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை கோயில் விழா மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு, 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிேஷகமும் அலங்காரம், மகா தீபாராதனையும் சுவாமி புறப்பாடும் நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவனடி யார்கள், பல்லக்கில் நடராஜரை சுமந்து ஆடியபடி கோயில் உள் பிரகாரத்தில் வலம் வந்தனர்.அதைத் தொடர்ந்து கோயில் ராஜகோபுரம் முன்பு, வெள்ளி சப்பரத்தில் நடராஜர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளால், ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், மதியம் வரை நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொடுமுடி மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை யொட்டி, அதிகாலையில், நடராஜப் பெருமான், சிவகாமி அம்மன் மற்றும் நாயன்மார்களுக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி பழையபேட்டை கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நடராஜ மூலமந்திர ஹோமம் நடந்தது. நேற்று காலை 2.30 மணிக்கு விசேஷ திரவ்ய திருமஞ்சனம் காலை 7 மணிக்கு திருவெம்பாவை உற்ஸவம், கோபுர தரிசனம் நடந்தது.மாலை பவுர்ணமி கிரிவல பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலை, பார்வதி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் நகர் வலம் வந்து சிவன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT