Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

குடியிருப்பு பகுதிகளிடையே டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கூடாது குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், அலைபேசி வாயிலாக நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், நேரில் வந்தும் மனுக்களை அளித்தனர்.

திருப்பூர் 63-வேலம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், "பல்லடம் வட்டம் 63-வேலம்பாளையம் வாரி கார்டன் என்ற இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைய ள்ளதை அறிந்தோம். குடியிருப்பு களும், கோயில்களும் நிறைந்த எங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி வெங்கமேடு பகுதி மக்கள் அளித்த மனுவில், "வெங்கமேடு பகுதியில் ஏற்கெனவே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்படுவதால் பெரும் இடையூறு ஏற்படும். புதிய கடைக்கான அனுமதியை ரத்து செய்து, அதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இடம் மாற்ற வேண்டும்

திருப்பூர் செம்மாண்டம் பாளையம் கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

திருப்பூர் மாவட்டம் மங்கலம் வேட்டுவப்பாளையத்தில் கடந்த 13-ம் தேதி திருப்பூர் மேற்கு ரோட்டரி நீர் மேலாண்மை அறக்கட்டளை சார்பில் பெரிய அளவிலான தொட்டிகளை அமைத்து, ராட்சத மோட்டார்கள் மூலமாக குளங்களுக்கு நீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தின் வழியாக பிஏபி வாய்க்கால் செல்கிறது. இத்திட்டத்தால் மங்கலம் அணைக்கட்டுக்கு செல்லும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிடும்.

மழைக்காலம் தவிர மற்ற நாட்களில் மங்கலம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் சொற்பமாக மாறிவிடும். மேலும், நல்லம்மன் அணையில் நீரின் அளவு குறைவதால், மணல் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. அணையின் சுவர்கள் பலவீனமாகவும் வாய்ப்புள்ளது. அதனை ஒட்டியுள்ள செம்மாண்டம்பாளையம், செட்டிபாளையம், புதுப்பாளையம் சின்னாண்டிபாளையம், சுல்தான் பேட்டை, குளத்துப்பாளையம், வஞ்சிபாளையம் மற்றும் நொய்யல் வழி பாசன விவசாயிகள் முற்றிலும் பாதிப்படைவர்.

மேலும், ஆண்டிப்பாளையம் அணை மற்றும் சின்னாண்டி பாளையம் குளத்துக்கு தண்ணீர் குறைந்துவிடும். பொதுமக்கள், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வேறு இடத்தில் நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அம்மா மினி கிளினிக்

குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மோல்ரபட்டி பகுதி மக்கள் அளித்த மனுவில், "மோல்ரபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கள்ளிவலசு என்ற கிராமத்தில் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் அம்மா மினி கிளினிக் அமைத்து கொடுத்தால், சுமார் 5 ஆயிரம் ஏழை மக்கள் பயன்பெறுவர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x