Published : 29 Dec 2020 03:16 AM
Last Updated : 29 Dec 2020 03:16 AM

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் ஆட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் மனு

மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விளாத்திகுளம் பேரிலோவன்பட்டி, முதலிப்பட்டி கிராம விவசாயிகள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குறைதீர் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் சிலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் மனு அளித்தனர்.

மழை நிவாரணம்

விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி, முதலிப்பட்டி கிராம விவசாயிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் அழுகிய பயிர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ‘‘நடப்பு ஆண்டில் பெய்த வடகிழக்கு பருவமழையால் எங்கள் கிராமத்தில் 1,000 ஹெக்டேர் மானாவாரி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு துயரத்தில் உள்ளோம். அதிகாரிகளை கொண்டு சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா சிறப்பு நிதி

அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் அ.வரதராஜன் தலைமையில் எட்டயபுரம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ‘எட்டயபுரம் பகுதியில் மின்னணு குடும்ப அட்டையாக மாற்றப்பட்ட போது சுமார் 300 பேருக்கு குடும்ப அட்டை (அரிசி கார்டு) வழங்கப்படாமல் விடுபட்டுப் போனது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக அரிசி வழங்கப்படவில்லை. பொங்கல் பரிசுத்தொகை, கரோனா காலத்தில் வழங்கப்பட்ட உதவித்தொகை போன்றவை வழங்கப்பட வில்லை. குடும்ப அட்டை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில், நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள சங்கரராமேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் வீதி உலா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்- மகள் தீக்குளிக்க முயற்சி

விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த பெண்,தனது 14 வயது மாற்றுத்திறனாளி மகளுடன்ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, உடலில்மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார. போலீஸார் அவர்களை தடுத்து காப்பாற்றினர். பின்னர் அந்த பெண் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘எனது மகள் கடந்த 14-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போதுஅதே பகுதியை சேர்ந்த இளைஞர் வீட்டுக்குள்புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர்போலீஸார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். அவரை ஜாமீனில் எடுக்க முயற்சி நடைபெறுகிறது. அவர் வெளியே வந்தால் எங்கள்குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அவரை வெளியே விடாமல்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x