Published : 28 Dec 2020 07:18 AM
Last Updated : 28 Dec 2020 07:18 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 4,627 மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு எழுதினர் ஆட்சியர்கள் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சிவன் அருள் ஆகியோர் பார்வையிட்டனர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 51 மையங்களில் நேற்று நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் 4,627 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வுகள் ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்’ மூலம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2020-21-ம்கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர் 27-ம் தேதி (நேற்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வானது 2 நிலைகளில் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வுகள் மாநில அளவிலும், 2-ம் நிலை தேர்வுகள் தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது. இத்தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பில் அதாவது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது மாதந்தோறும் ரூ.1,250 வழங்கப்படும்.

இதற்கு, அடுத்தப்படியாக இளங் கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பயிலும்போது மாணவர் களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் வரை இந்த கல்வி உதவித்தொகையை பெறலாம். மத்திய, மாநில அரசுகள் மூலம் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு கல்வி யாண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வுகள் (முதல்நிலை) நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 51 மையங்களில் இத்தேர்வுகள் நடைபெற்றன.

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் ஈவெரா நாகம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொரப் பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 17 பள்ளிகளில் தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வில் கலந்து கொள்ள 1,589 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 1,511 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். 78 பேர் பங்கேற்கவில்லை.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் எல்எப்சி மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெமிலி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 17 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வுகள் நேற்று நடைபெற்றன. 1,942 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 1,836 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். 106 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. ராணிப்பேட்டை எல்எப்சி பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சி யர் கிளாட்ஸ்டன்புஷ்பராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

அதேபோல, திருப்பத்தூர் மாவட் டத்தில் திருப்பத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார் பேட்டை பொன்னேரி அரசு மேல் நிலைப்பள்ளி, ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 17 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வுகள் நேற்று நடைபெற்றன. 1,331 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 1,280 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். 51 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், இதைத்தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை படிப்பறிவுத் தேர்வும் நடைபெற்றன. கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தேர்வு எழுத வந்த மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர உத்தரவிடப்பட்டிருந்தது.

பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்நிலை தேர்வில் வெற்றிபெறுவோர் 2-ம் நிலை தேர்வில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள். தேசிய அளவில் நடைபெறும் 2-ம் நிலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x