Published : 27 Dec 2020 03:16 AM
Last Updated : 27 Dec 2020 03:16 AM
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரை கிராமங்களில், 16-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுனாமி நினைவிடங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தமிழகத்தில் கடற்கரை கிராமங்களை சுனாமி தாக்கியதையும், அதன் இழப்புகளையும் எளிதில் மறக்க முடியாது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகை மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுனாமியின்போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தவர்கள் நினைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொட்டில்பாட்டில் சுனாமியால் உயிரிழந்த 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், உறவினர்கள் மெழுகுவத்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, குளச்சல் சுனாமி காலனியில் மவுன ஊர்வலத்தை, கொட்டில்பாடு பங்குதந்தை ராஜ் தொடங்கி வைத்தார். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமை வகித்தார். மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் திரளானோர் கலந்துகொண்டனர். கொட்டில்பாடு கல்லறையை ஊர்வலம் அடைந்தது. அங்கு இறந்தவர்களின் உறவினர்கள் துக்கம் தாளாமல் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்கச் செய்தது. அதைத்தொடர்ந்து கொட்டில்பாடு அலெக்ஸ் ஆலயத்தில் நினைவு திருப்பலி நடைபெற்றது.
குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் சுனாமியால் இறந்தவர்களுக்கு மீனவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். மணக்குடி சுனாமி ஸ்தூபியில் மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தி மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
குமரி கடற்கரை கிராமங்களில் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுனாமியால் இறந்தவர்களின் நினைவாக தேவாலயங்களில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கன்னியாகுமரி முக்கடல் சங்கம பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி, எம்எல்ஏ ஆஸ்டின், காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நேற்று மீனவர்கள் கடலில் மலர் தூவி வழிபட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கணவாய் மீன்பிடித் தொழிலாளர் நலச்சங்க நிர்வாகி முனியசாமி தலைமையில் ஏராளமானோர் திரண்டு கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும், கடற்கரையில் மெழுகுவத்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்கத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் திரேஸ்புரம் கடற்கரையில் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
சுனாமி போன்ற இயற்கை பேரிடர் மீண்டும் தமிழக கடற்கரையை தாக்காமல் இருக்க, கடல் மாதாவை சாந்தப்படுத்தும் நோக்கத்திலும், சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நினைவு தின நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT