Published : 27 Dec 2020 03:16 AM
Last Updated : 27 Dec 2020 03:16 AM
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக, மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர், ஏற்கெனவே ஆதிச்சநல்லூரில் முதல் கட்ட ஆய்வை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று 2-ம் கட்டமாக ஆய்வு செய்தனர். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 114 ஏக்கரிலும் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக வைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினர்.
மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உடனிருந்தனர்.
கொற்கையில் அகழாய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் இந்த ஆண்டு அகழாய்வு நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு கொற்கை அருகே உள்ள அகரம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம் ஆகிய இடங்களிலும், ஆதிச்சநல்லூர் பகுதியில் கால்வாய் மற்றும் புளியங்குளம் பகுதியிலும், சிவகளை பகுதியில் சிவகளை செக்கடி, மூலக்கரை, பேட்மாநகரம், பேரூர் திரடு, வெள்ளி திரடு, பரக்கிராமபாண்டி, பொட்டல் கோட்டை திரடு, ஆவரங்காடு ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT