Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM
சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை சிறப்பு திருப்பலி நடந்தது. ஆண்டு தோறும் நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா சிறப்பு பிரார்த்தனை நடப்பது வழக்கம். இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக நள்ளிரவில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டிருந்தது.
நேற்று காலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவ மக்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். சேலம் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவர் தேவாலயம், அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த வழிபாட்டில் கிறிஸ்தவ மக்கள் திரளாக பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் வீடுகளில் குடில் அமைத்து குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் காட்சியை அலங்கரித்து வைத்திருந்தனர்.
ஈரோடு
இதேபோல், ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் 6.30 வரையும், காலை 8 மணி முதல் 9.30 மணி வரையும் சிறப்பு ஆராதனை நடந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி ஆர்சி பாத்திமா தூய அன்னை ஆலயத்தில் திருத்தல பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.தேவாலயத்தின் உட்புறமும், வெளிப்புறமும் இயேசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில் அமைக்கப் பட்டிருந்தது.
ஓசூர்
ஓசூர் நகரில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஜெபவழிபாடு நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள் திருப்பாடல்களுடன், சிறப்பு திருப்பலி, மறையுரை மற்றும் நற்கருணை ஆராதனை ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.இதில் தூய இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை எம்.சூசை, உதவி பங்கு தந்தை, அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT