Published : 25 Dec 2020 03:17 AM
Last Updated : 25 Dec 2020 03:17 AM

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம் 300 நாட்களாக உயர்த்தப்படும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தகவல்

திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகே நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பேசும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். அருகில், எம்எல்ஏ நல்லதம்பி, மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம் 300 நாட்களாக உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் பல்வேறு பகுதியில் கிராம சபா கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், கசிநாயக்கன் பட்டி மற்றும் திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பங் கேற்று பேசினார்.

திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் துரைமுருகன் பேசும் போது, "ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் வாக்களித்தனர். அவர் உயிரோடு இல்லாததால் பழனி சாமி அதிர்ஷ்டவசமாக முதல்வர் ஆகிவிட்டார். கடந்த தேர்தலில் பழனிசாமி முதல்வராக வருவார் என மக்கள் யாருமே நினைக்கவில்லை. நினைத்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்காது.

10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த திட்டங் களையும், அதன்பிறகு 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள திட்டங்களையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். திமுக ஆட்சியின் போது வழங்கப்பட்ட கலர் டிவி தற்போது வரை நல்ல நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் ஓராண்டுக்கு பிறகு செயலற்று போனது. மக்கள் யாருமே அதை பயன்படுத்தவில்லை.

தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது திமுக ஆட்சியில் தான். தரமற்ற பொருட் களை வழங்கி மக்களை அதிமுக அரசு ஏமாற்றி வருகிறது.

கடந்த முறை வாக்களித்ததால் விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை ரூ.800 வரை உயர்ந்துவிட்டது. அடுத்த முறை வாக்களித்தால் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விலை உயரவும் வாய்ப்புள்ளது. கரோனா காலத்தில் வேலை இழந்து அவதிப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என திமுக கூறியது. ஆனால், 1,000 ரூபாய் வழங்கிய அதிமுக அரசு அதன் பிறகு எதையும் வழங்கவில்லை.

தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் பொங்கல் பரிசாக கரும்பு, அரிசியு டன் ரூ.2,500 வழங்குவதாக அறிவித் துள்ளது. நாடே வேளாண் சட்டங் களை எதிர்க்கும்போது அதிமுக அரசு ஆதரவு தெரிவிக்கிறது. இதில், முதல்வர் பழனிசாமி தான் ஒரு விவசாயி எனக்கூறி வருவது நகைப்புக்குரியதாக உள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயக் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை கருணாநிதி தள்ளுபடி செய்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்தார்களா ? என்பதை மக்கள் உணர வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம் 300 நாட்களாக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பெருகிவிட்ட அசுர அரசாக அதிமுக அரசு விளங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற கிராம சபா கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது’’. என்றார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ், நகரச்செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x