Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM
மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சேலம் உடையாப்பட்டியில் உள்ள சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று திரண்ட மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு, மின்வாரிய தொழிலாளர் சங்க மண்டலச் செயலாளர் சேகர், தொமுச மாநில துணை பொதுச் செயலாளர் மணிகண்டன், சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பண்ணன், ஐஎன்டியுசி நிர்வாகி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இதில், மின் வாரிய உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், ஃபோர்மேன், லைன்மேன், உதவியாளர் என அனைத்துப் பிரிவு ஊழியர்களும் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக கூட்டமைப் பினர் கூறும்போது, “மின் வாரியத்தில் ஏற்கெனவே 5 துணை மின் நிலையங்கள் தனியாரிடம் விடப்பட்டுள்ளன. உயர்மின் கோபுர வழித்தடங்களின் பராமரிப்பு, மின் வாரியத்தில் பொதுமக்களுக்கான மின்தடை நீக்கம், புதிய மின் இணைப்பு வழங்குதல் உள்பட முக்கிய பணிகள் அனைத்தையும் தனியாரிடம், அவுட்சோர்சிங் முறையில் மேற்கொள்ள உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 6-ம் தேதி ஒப்பந்தம் விடப்படவுள்ளது. இதை அரசு திரும்பப் பெற வேண்டும்”என்றனர்.
நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் மின்வாரிய அனைத்து தொழில் சங்க கூட்டமைப்பின் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. சிஐடியு திட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
ஈரோட்டில் ஈவிஎன் சாலையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கிய காத்திருப்புப் போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தொமுச, சிஐடியு, மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம், பொறியாளர் சங்கம், ஐஎன்டியுசி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தருமபுரியில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் அனைத்து மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணை தலைவர் ஜீவா தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர் ஆகிய மூன்று வட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT