Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு காய்கறி நடவு விதைகள், இயற்கை உரம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற் பனையை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தோடக்கலை இயக்குநர் முகமையின் விற்பனை அங்காடியில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள், நடவு விதைகள், இயற்கை உரங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். முன்னதாக, தோடக்கலை துணை இயக்குநர் மோகன் வரவேற்றார். திருப்பத்தூர் வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மானிய விலையில் காய்கறி நடவு விதை மற்றும் இயற்கை உரம் விற்பனையை தொடங்கி வைத்தார். முதற் கட்டமாக 480 பேருக்கு காய்கறி நடவு விதைகள், இயற்கை உரம், கையேடு அடங்கிய தொகுப்பினை அமைச்சர் கே.சி. வீரமணி விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்தார்.
ஒரு தொகுப்பின் விலை ரூ.850 ஆகும். அரசு மானியம் ரூ.340-ஐ கழித்து ரூ.510-க்கு காய்கறி நடவு விதை, இயற்கை உரம் தொகுப்புகளை பயனாளிகள் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய குமார், ஆவின் தலைவர் வேலழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT