Published : 19 Dec 2020 03:15 AM
Last Updated : 19 Dec 2020 03:15 AM

தலா 100 டன் கொள்ளளவுடன் தூத்துக்குடியில் 2 வேளாண் கிடங்குகள் அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கிடங்கை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தலா 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 வேளாண் கிடங்குகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார்.

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் பூவாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் நபார்டுவங்கி நிதியுதவியுடன் தலா ரூ.19 லட்சம் மதிப்பில் தலா 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வேளாண் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். வைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வேளாண் கிடங்குகளை திறந்து வைத்தார். கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பூவாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 288 பேருக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், வேளாண்மைத்துறையின் மூலம் 8 பேருக்கு ரூ.3.08 லட்சம்மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கோரம்பள்ளம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 வேளாண் கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு ரூ.28.50 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா..சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வக்குமார், கருங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் கோமதி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீரமாமுனிவர் மணிமண்டபம்

தொடர்ந்து கயத்தாறு வட்டம்காமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புனித பரலோக மாதா ஆலயவளாகத்தில் தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படும் வீரமாமுனிவருக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் மற்றும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தனர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயப் பங்குதந்தை அந்தோணிகுரூஸ், கோவில்பட்டி வட்டார அதிபர் அலோசியஸ் துரைராஜ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

கோவில்பட்டி அருகே குமரெட்டியாபுரத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறும்போது; ‘‘எம்ஜிஆருக்கு பாத்தியப்பட்டவர்கள் நாங்கள் தான். அவர் நடிகராக இருந்த போது ரசிகர்களாக இருந்தோம். அவர் அதிமுகவை தொடங்கினார். அந்தக் கட்சியில் நாங்கள் உள்ளோம். எனவே, நாங்கள் தான் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட உரிமை உள்ளவர்கள். மற்ற யாருக்கும் தார்மீகமாக அந்த உரிமை கிடையாது. தார்மீகம் இல்லாமல் உரிமை கொண்டாடினால் அதற்கு பெயர் வேறு’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x