Published : 18 Dec 2020 03:18 AM
Last Updated : 18 Dec 2020 03:18 AM

எதிர்கால சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் மாற்றங்கள் செய்யப்படுகிறது பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழாவில் அமைச்சர் பேச்சு

கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அருகில் கே.பி.முனுசாமி எம்பி, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி.

கிருஷ்ணகிரி

எதிர்கால சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று 232 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:

முதல்வரின் உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறையில் எதிர்கால சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மெய்நிகர் வகுப்பறைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அறிவியல் கல்வியை வளர்க்கும் விதமாக அடல் டிங்கரிங் லேப் அமைக்கவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6,7,8-ம் வகுப்பு பயிலும் 3 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கப்படும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறைக்கப் பட்டுள்ளதற்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர், தமிழக முதல்வரை பாராட்டியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது என உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத அளவுக்கு தமிழகத்தில் அவசர காலத்தில் குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளச் சேதம் ஏற்படாத வகையில் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங் களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி,அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார், பாலகிருஷ்ண ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பர்கூர் சி.வி.ராஜேந்திரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் மனு

2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறி யிருப்பதாவது:

2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பினை இழந்து பல ஆண்டுகளாக வேதனையில் தவிக்கிறோம். இந்த வெயிட்டேஜ் முறையை கடந்த 2018-ம் ஆண்டு ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சி யடைந்தாலும், எங்களுக்கு தீர்வு கிடைக்காமல் தவித்து வருகிறோம். தவறான வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட சுமார் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பினை வழங்கிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x