Published : 17 Dec 2020 03:18 AM
Last Updated : 17 Dec 2020 03:18 AM

வாழப்பாடி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் தொடக்கம் முதல்நாளில் ரூ.2.40 லட்சத்துக்கு விற்பனை

வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த பருத்தி மூட்டைகள்.

சேலம்

வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏல விற்பனை நேற்று (16-ம் தேதி) தொடங்கியது. முதல் நாளில் ரூ.2.40 லட்சத்துக்கு விற்பனையானது.

வாழப்பாடியில் உள்ள சேலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பருத்தி ஏல விற்பனை மையத்துக்கு வாழப்பாடி, கெங்கவல்லி வட்டாரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக் கொண்டு வருவது வழக்கம்.

ஆண்டுதோறும் ஏல விற்பனை டிசம்பரில் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒவ்வொரு புதன்கிழமையிலும் நடைபெறும். பருத்தி விற்பனைக்கு வரும் விவசாயிகளுக்கு அன்றைய தினமே அதற்குரிய தொகை கிடைத்துவிடுவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நடப்பு சீசனுக்கான பருத்தி ஏல விற்பனை நேற்று நடைபெற்றது.

முதல் நாளில் 100 மூட்டை பருத்தி விற்பனைக்கு வந்தது. குறைவான எண்ணிக்கையில் பருத்தி வந்தபோதிலும், கணிசமான விலை கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில், டிசிஎச் ரக பருத்தி மூட்டைக்கு அதிகபட்சமாக ரூ.7,319-ம், குறைந்தபட்சமாக ரூ.6,999-ம் விலை கிடைத்தது.

இதேபோல, ஆர்சிஎச் ரக பருத்திக்கு மூட்டைக்கு அதிகபட்சமாக ரூ.6,100-ம், குறைந்தபட்சமாக ரூ.5,469-ம் கிடைத்தது. நேற்று ஒரே நாளில் ரூ.2.40 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

இதுதொடர்பாக விற்பனை நிலைய அதிகாரிகள் கூறும்போது, ”மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால், பருத்தி மூட்டைகள் நனைந்துவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் பலர் வரவில்லை. இனி படிப்படியாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிகரிக்கும். சீசன் உச்சத்தில் இருக்கும்போது 7 ஆயிரம் மூட்டைகள் வரை விற்பனைக்கு வரும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x