Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

மீன் பிடிக்கச் சென்ற போது கடலில் விழுந்து தொழிலாளி மாயம் சிபிசிஐடி விசாரணை நடத்த உறவினர்கள் வலியுறுத்தல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தூத்துக்குடியில் கடலில் விழுந்து தொழிலாளி காணாமல் போன சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் . படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி கடலில் விழுந்து மாயமான சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரியும் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரோனா பரவலைத் தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சிலர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கோமதி அம்மாள்மற்றும் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:

சிபிசிஐடி விசாரணை

‘எனது மகன் கண்ணன் கட்டிடவேலை செய்து வந்தார். கடந்தசில நாட்களாக கட்டிட வேலையின்றி மிகவும் சிரமப்பட்டார். இதனால் கடந்த 21.10.20 அன்று தருவைகுளத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்வதாக கூறிச் சென்றார். கடந்த 26.10.20 அன்று எனது மகன் படகிலிருந்து தவறி விழுந்து விட்டதாகவும், அவரை காணவில்லை என்றும் அவருடன் படகில் சென்ற மற்றவர்கள் தெரிவித்தனர்.

எனது மகன் மாயமானது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மகன்மாயமானதில் மர்மம் உள்ளது.இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிகால் வசதி

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘சாத்தான்குளம் பேரூராட்சி 4-வது வார்டில் கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி மற்றும் வடிகால் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் எங்கள் பகுதியில் ரூ.65 லட்சம் செலவில் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

ஊருக்குள் உள்ள தண்ணீர் வெளியில் செல்லும் வகையில் வடிகாலை அமைக்காமல், வெளியில் உள்ள தண்ணீர் ஊருக்குள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பயன்படும் விதத்தில் மழைநீர் வடிகால் உயரத்தை அதிகப்படுத்தி தண்ணீர் அருகில் உள்ள அமராவதி குளத்துக்கு செல்லும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மணல் திருட்டு

திருச்செந்தூர் அருகே உள்ள நடு நாலு மூலை கிணறு சமூக ஆர்வலர் கண்ணன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த மனு:

‘மேல திருச்செந்தூர் கிராமம் நடு நாலு மூலைக்கிணறு பகுதியிலும், கீழ நாலு மூலைக்கிணறு பகுதியிலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான குன்றுமேல் சாஸ்தா கோயில் பகுதியிலும், மேல அரசூர் பகுதியிலும் சட்டவிரோதமாக தேரியிலிருந்து செம்மண் திருடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பட்டிருந்தனர்.

சிறப்பு ஸ்கூட்டர்

தூத்துக்குடி மாவட்ட தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு மாவட்ட பிரதிநிதி மகாராஜன் தலைமையில் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு ஸ்கூட்டர் வழங்க வேண்டும். மாத உதவித் தொகை ரூ. 5 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். தண்டுவட காயத்தை பல்வகை ஊனமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x