Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

தீயணைப்புத் துறை பரிந்துரை மதுரையில் ஜவுளிக்கடை உட்பட 5 கடைகளுக்கு ‘சீல்’ மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை விதிமுறைகளின்படி செயல்படாத 800-க்கும் மேற்பட்ட கடைகள் அடையாளம் காணப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மதுரை

மதுரையில் தீயணைப்புத்துறை பரிந்துரை அடிப்படையில் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அமைக்கப்படாத, ஜவுளிக் கடைகள் உட்பட 5 வர்த்தக நிறுவனங்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரையில் கடந்த நவ.14-ம் தேதி தீபாவளியன்று விளக்குத்தூண் பகுதியில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கச் சென்றபோது தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவராஜன் ஆகிய இருவரும் கட்டிடம் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விசாரணையில் அந்தக் கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற, பழமையான கட்டிடங்களைக் கணக்கெடுத்து நோட்டீஸ் வழங்க தமிழக தீயணைப்பு, மீட்புத்துறை இயக்குநர் ஜாபர்சேட் உத்தரவிட்டார். இதன்படி, மதுரையில் வெளியூர், உள்ளூர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட நெருக்கடியான வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இதில் விதிமுறைகளின்படி செயல்படாத 800-க்கும் மேற்பட்ட கடைகள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, அந்நிறுவனங்களுக்கு தீயணைப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த ஆய்வின்போது, விளக்குத்தூண் பகுதியில் மிகவும் பழமையான பாதுகாப்பற்ற சூழலில் நவபத்கான் வீதி, மஞ்சனக்காரத் தெரு பகுதியில் செயல்பட்ட 3 ஜவுளிக்கடைகள், பேன்சி ஸ்டோர் உட்பட 5 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, தீயணைப்புத்துறை மதுரை மாநகராட்சி நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்தது. இதன்படி 3 ஜவுளிக் கடைகள், மூடிக்கிடக்கும் 2 வர்த்தக நிறுவனங்களை சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், மதுரையில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், ஊழியர்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தீயணைப்பு துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. மதுரையில் மாசி வீதிகளைச் சுற்றிலும் குறைபாடுகள் கண்டறியப்பட்ட சுமார் 800-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். குறிப்பிட்ட நாட்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x