Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 53-வது வார்டு கல்லாங்காடு வாய்க்கால்மேடு பகுதியில், சாக்கடை கால்வாய்களை இணைப்பதற்கான பாலமானது, மிகவும் உயரமாக அமைக்கப்பட்டதால், சாலையில் முன்னும் பின்னும் பெரும் பள்ளம்போல ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்தது போல கட்டு போட்டும் சிலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் அருணாசலம் தலைமை வகித்தார்.
இதுகுறித்து மக்கள் கூறும் போது, "மழை பெய்து வருவதால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மக்கள் சென்று வர முடியாத நிலை உள்ளதோடு, அப்பகுதிக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். சாலையை உயர்த்தி, மழைநீர் வழிந்தோட உரிய கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.
சம்பவ இடத்துக்கு வீரபாண்டிபோலீஸார் சென்று, அதிகாரிகள்மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை யடுத்து கலைந்து சென்றனர்.
ஜே.ஜே. நகர் பகுதியிலும்..
திருப்பூர் மாநகர் நல்லூர் அருகே காசிபாளையம் ஜே.ஜே.நகர் பகுதியிலும் குடியிருப்புகளுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. கழிவுநீரும் சேர்ந்த தால் அதிருப்தியடைந்த அப்பகுதிபொதுமக்கள், நல்லூர் - காசிபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.மாநகராட்சி உதவி பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், ஊரக காவல் நிலைய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘கோவில் வழி அருகே காட்டுப் பகுதியில் சேகரமாகும் மழைநீர், பள்ளத்தில் வழிந்தோடி செவந்தாம்பாளையம், பல்லக்காட்டுபுதூர் வழியாக ஜே.ஜே. நகர் வந்து பிறகு தனியார் இடத்துக்குள் சென்று நொய்யலில் கலக்கிறது.
இதில், சம்பந்தப்பட்ட தனிநபர், தண்ணீர் தங்களது இடத்துக்குள் வராமல் தடுத்துவிட்டார். இதனால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்குகிறது. தனியார் இட நீர்வழிப்பாதை என்பதால் புகார் கூற இயலாது.
இருப்பினும், இதுதொடர்பாக மாநகராட்சி மற்றும் தனியார் இடையே வழக்கு நிலுவையில் உள்ளது. பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சி நடைபெற்று வருகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT