Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

கந்துவட்டி கும்பல் பிடியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கந்துவட்டிக் கும்பல்கள் பிடியில் சிக்கியுள்ளதாக திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. கூறினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் நெசவாளர்கள், பொதுமக்களை சந்தித்த கனிமொழி, சென்னிமலையில் மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:

திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டதுடன், இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், அதிமுகஆட்சியில் பல இடங்களில் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. நெசவாளர் வீட்டுக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் கிடைப்பதில்லை. கரோனா காலத்தில் நெசவாளர்களுக்கு தனியாக நிதியுதவி அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.

சமூகத்திலும், குடும்பங்களிலும் பெண்கள் மதிக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. திமுக ஆட்சியில் 3.20 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கந்துவட்டிக் கும்பல்கள் பிடியில் சிக்கியுள்ளன. கரோனா காலத்தில் கடனை திரும்பச் செலுத்த சிரமப்பட்ட பொதுமக்களை, கந்துவட்டிக் கும்பல்கள் மிரட்டின. அதைத் தட்டிக் கேட்கக்கூட மத்திய, மாநில அரசுகளுக்கு தைரியமில்லை. இதற்கெல்லாம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர். இவ்வாறு அவர் பேசினார்.

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

இதைத் தொடர்ந்து, பல்லடத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தோல்வி பயம் காரணமாக, 2ஜி வழக்கு குறித்து முதல்வர் கே.பழனிசாமி பேசி வருகிறார். அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடம் மேலோங்கி உள்ளது. பொருளாதார வளர்ச்சி இல்லாததால், 50 சதவீதத்துக்கும் அதிகமாக வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது. புதிய தொழில் வளர்ச்சி இல்லாததால், வட மாவட்டங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. வரும் 8-ம் தேதி நடைபெறும் விவசாயிகளின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x