Published : 07 Dec 2020 03:16 AM
Last Updated : 07 Dec 2020 03:16 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 450 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பின மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 450 ஏரி, குளங்கள் முழுமை யாக நிரம்பியுள்ளன என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே கடந்த 4-ம் தேதி வெள்ளாம் பெரம்பூர் கிராமத்தில் கோண கடுங்க லாற்றில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்த் துறை இயக்குநருமான என்.சுப்பையன், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையின் போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்யும் என்பதால், அதற்கு ஏற்றார்போல பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர் வாகம் எடுத்து வந்தது. ‘நிவர்' மற்றும் ‘புரெவி' புயல்களால் அதிக மழை பெய்துள்ளது. இதனால், ஒரு சில இடங்களில் வாய்க்கால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மழை விட்டுள்ளதால், பல இடங்களில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கியுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து கணக் கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 642 ஏரி, குளங்களில் இதுவரை 450 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. தற்போது வரை 47 நிவாரண முகாம்களில் 6,038 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் பவுடரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறுதி வரை மழை இருக்கும் என்பதால், அதற்கேற்றார்போல தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது, ஆட்சியர் ம.கோவிந்த ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

கண்ணனாற்றில் கரை உடைப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியம் பெரியக்கோட்டை கண்ணனாற்றில் நேற்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றின் கரை 90 அடி நீளத்துக்கு உடைந்தது. இதனால், அருகில் உள்ள வயல்களுக்குள் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால், அந்தப் பகுதியில் 1,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. தகவலறிந்ததும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன், ஆட்சியர் ம.கோவிந்தராவ், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் ஆகியோர் பெரியகோட்டைக்கு சென்றனர். உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் காரில் செல்ல முடியாத நிலை இருந்ததால், 4 கி.மீ தொலைவுக்கு டிராக்டரில் சென்று, அங்கிருந்து 1 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்று, உடைப்பு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டனர்.

பின்னர், சவுக்கு மரங்கள், மணல் மூட்டைகளைக் கொண்டு கரையை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x