Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM
தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயின்று உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் மருத்துவர்களாகி ஏழைகளுக்கு சேவையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 21 மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இந்த மாணவ, மாணவியருக்கு ஸ்டெதாஸ்கோப் வழங்கி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 21 மாணவர்களுக்கும் ஆட்சியர் ஸ்டெதாஸ்கோப் வழங்கி பாராட்டு தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் ஆட்சியர் பேசியது:தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று நீட் தேர்வுப் பயிற்சி பெற்றவர்களில் 21 பேர், தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசு வழங்கிய இந்த சிறந்த வாய்ப்பை மாணவ, மாணவியர் முறையாகப் பயன்படுத்தி மருத்துவம் பயில வேண்டும். மருத்துவப் பணி என்பது சிறந்த சேவைப் பணி. இதற்கான கல்வியை அச்சம், தயக்கம் இன்றி நம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் படித்து முடிக்க வேண்டும்.
பெற்றோர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு முயற்சிகளில் கல்வி பயின்று தற்போது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள அனைவரும் உயர்ந்த எண்ணங்களையும், சேவை நோக்கத்தையும் கொண்ட வர்களாக உருவாக வேண்டும். இவ்வாறு மருத்துவர்களான பிறகு கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவை ஆற்ற உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.
நாமக்கல்லில் வாழ்த்து
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் பயின்ற 10 மாணவ, மாணவியருக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.நாமக்கல் ஆட்சியர் அலுவல கத்தில் இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து, புத்தகங்கள் மற்றும் ரொக்கப்பரிசினை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT