Published : 05 Dec 2020 03:17 AM
Last Updated : 05 Dec 2020 03:17 AM
தென்னை மரங்களை காண்டாமிருக வண்டுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் தென்னை மரம் மற்றும் இளங்கன்றுகளில் காண்டாமிருக வண்டு தாக்குதல் தற்போது பரவலாக காணப்படுகிறது.
இந்த வண்டுகளிலிருந்து தென்னங் கன்றுகள் மற்றும் மரங்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலில் தென்னந்தோப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தேங்கியுள்ள குப்பைக் கழிவு களை அகற்ற வேண்டும்.
பச்சை மஸ்கார்டின் எனப்படும் பூஞ்சாணத்தை எருக்குழிகளில் இட்டு காண்டாமிருக வண்டின் புழுப்பருவத்தை அழிக்க வேண்டும். முதிர்ந்த வண்டுகளை அழிக்க இளம் கன்றுகளில் குருத்து பகுதிகளில் பெருமணல் இட வேண்டும். மட்டை இடுக்குகளில் நாப்தலின் உருண்டை எனப்படும் ஆத்துருண்டுகளை இடுவதால் வண்டின் தாக்குதலை தவிர்க்க முடியும்.
விளக்குப்பொறிகள்
மாலை நேரங்களில் தோப்பின் அருகே விளக்குப்பொறிகள் அமைத்து, சொக்கப்பனை கொளுத்தி முதிர்ந்த வண்டுகளை கவர செய்து அழிக்கலாம். இந்த முயற்சிகளை தனிநபர் அல்லது ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுத்தினால்தான், காண்டாமிருக வண்டின் தாக்குதலில் இருந்து தென்னை மரங்கள் மற்றும் இளங்கன்றுகளை பாதுகாக்க முடியும்.அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்னை மரம் மற்றும் இளங்கன்றுகளில் ‘சுருள் வெள்ளை ஈ’ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, என்கார்சியா ஒட்டுண்ணி மற்றும் கிரைசோபெர்லா இரை விழுங்கி போன்றவை சுருள் வெள்ளை ஈக்களுக்கான இயற்கை எதிரிகளை தென்னந்தோப்புக்குள் பெருக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக தட்டைப் பயறு, சணப்பை பயிறுகளை பயிரிடலாம். இதன் மூலம் இயற்கை எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவை சுருள் வெள்ளை ஈக்களின் புழுக்களை அழிக்கும்.
இதுதவிர, தண்ணீரை தென்னை ஓலைகளில் வேகமாக பீய்ச்சி அடிப்பதன் மூலம் சுருள் வெள்ளை ஈக்களை விரட்ட லாம். ஓர் ஏக்கருக்கு 10 முதல் 12 எண் ணிக்கையிலான மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை வைத்து சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
கனமழை காலங்களில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரும் இத்தகைய சூழலில், விவசாயிகள் இயற்கை எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது, சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தப்படும்.
இந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி தென்னை மகசூல் அதிகரித்து விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT