Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் வீச உள்ளதாகவும், அந்த சமயத்தில் மிகவும் கன மழை பெய்யக்கூடும் என வானிலைஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் மிக அவசியத் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் அதிக வெள்ளம் மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றின் அருகில் செல்ல வேண்டாம்.
மின்கம்பங்கள், மின்கம்பிகள், தெருவிளக்குகள், மின் மாற்றிகள்ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம். காற்று பலமாக வீசும் என்பதால் மரங்கள் விழ வாய்ப்புள்ளது எனவே, பொதுமக்கள் மரங்களுக்கு கீழ் எக்காரணம் கொண்டும் ஒதுங்க வேண்டாம்.
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் கிராமப்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும். தாழ்வானபகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்வதுடன், மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். கால்நடைகள் வளர்ப்போர் தங்களது கால்நடைகளை பாதிப்பு ஏற்படாத பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும், மின் தடை ஏற்படவாய்ப்பு உள்ளதால் டார்ச்லைட், மெழுவத்தி, தீப்பெட்டி போன்றவைகளை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகாரபூர்வ மற்றும் நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் பார்க்க வேண்டும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். புயல் பாதிப்பு தொடர்பான தகவல்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி 1077 மற்றும்0461 2340101- லும், வாட்ஸ்அப் எண் 9486454714-லும் மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக தெரிவித்து உதவ வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT