Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஏஐடியுசியினர். அடுத்தபடம்: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: எஸ்.குரு பிரசாத்

கிருஷ்ணகிரி

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில், ஏஐடியுசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முனியன், பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சேகர், சிவராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கண்ணு, சங்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ராஜ்குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது, டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

ஓசூரில் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஏஐடியுசி சார்பாக ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆதில் தலைமை தாங்கினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் நிருபன் முன்னிலை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் லகுமைய்யா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பழனி, ஓசூர் மாநகர செயலாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாய போராட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கு.பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியூசி மாவட்ட பொருளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் நகரச் செயலாளர் கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்ரமணி, பொன்கதிரவன், பாலு, நஞ்சப்பன் உள்பட அனைத்து கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x